கடலூர் தலைமை தபால் நிலையம் மூடல்
தபால்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடலூர் தலைமை தபால் நிலையம் மூடப்பட்டது.
கடலூர்,
கடலூர் தலைமை தபால் நிலையத்தில் தபால்காரராக வேலை பார்த்து வருபவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். இதன் பரிசோதனை முடிவு வெளியானதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மூடல்
இதனால் அதிர்ச்சி அடைந்த தபால் நிலைய ஊழியர்கள், நேற்று வேலைக்கு செல்ல தயக்கம் காட்டினர். இதற்கிடையே தபால் நிலையத்தை இன்று (அதாவது நேற்று) ஒரு நாள் மட்டும் மூடுவது என அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை தலைமை தபால் நிலைய அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் தபால் நிலையத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். இதுபற்றி அறியாத நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தபால் அனுப்புவதற்கும், சேமிப்பு கணக்கில் பணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நேற்று காலை தபால் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தபால் நிலையம் பூட்டி கிடப்பதை பார்த்து விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது.