வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் தற்போது தொடர்ந்து பொதுமக்கள் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கின்றனரா என போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசியும் போட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் வெள்ளகோவில் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண்ணுக்கும், அக்கரப்பாளையம் புதூரை சேர்ந்த 30 வயது ஆணுக்கும், உப்புபாளையம் பகுதியைச் சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது, இதையடுத்து இவர்களை வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் வெள்ளகோவில் பகுதியில் கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கின்றனரா என ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர், மற்றும் போலீசார் கண்காணித்தனர். அப்போது முககவசம் அணியாமல் வந்த பஸ் கண்டக்டர், டிரைவர் உட்பட 27 பேருக்கு தலா ரூ.200-ம், பொது இடத்தில் எச்சில் துப்பிய ஒருவருக்கு ரூ.500-ம் அபராதம் விதித்தனர்.
வெள்ளகோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நேற்று மட்டும் வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் 153 பேரும், 45 வயதிலிருந்து 59 வயது வரையானவர்கள் 206 பேர், 2-ம் கட்ட தடுப்பூசி 10 பேருக்கும் என மொத்தம் 369 பேர் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.