கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு
கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி,
தமிழகத்தில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசு தெரிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 217 பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. அவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாதிரி தேர்வு நடத்தப்பட்டது.
ஒரு வகுப்பறையில் 50 சதவீதம் அல்லது 20 மாணவர்களை அமர வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பித்தனர்.
அறிவுரை
பள்ளிக்குள் நுழையும்போது மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்று அறிகுறிகள் இருந்தால் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி வளாகங்களில் மாணவர்கள் கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும். மதிய நேரத்தில் முக கவசத்தை அகற்றி உணவு சாப்பிட்ட பிறகு உடனடியாக அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
செய்முறை தேர்வு
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பிளஸ்-2 மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு படித்து தயாராகி வருகின்றனர். மேலும் வருகிற 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கூட்டம் நடந்தது.
இதையடுத்து செய்முறை தேர்வு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகளை பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து நடத்தப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.