திருச்செந்தூரில் தர்ப்பூசணி ஜூஸ் விற்பனை அமோகம்
திருச்செந்தூரில் தர்ப்பூசணி ஜூஸ் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் கோடைவெயில் வாட்டி வரும் நிலையில், தர்பூசணி ஜூஸ் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
கோடைவெயில்
தமிழகம் முழுவதும் கோடை வெயில் அதிகமாக உள்ளது. பகலில் பொது மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு கோடை வெயிலின் தாக்கம் உள்ளது. வெயிலின் தாக்கத்தை தாங்கமுடியாத பெண்கள் ஏராளமானோர் குடை பிடித்து செல்கின்றனர். வெயிலின் தாக்கத்தின் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு குளிர்பானங்களை குடித்து தனது உடலின் வெப்பத்தை குறைத்து கொண்டுள்ளனர். தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் செயற்கை குளிர்பானங்கள் விற்பனையும் அதிகமாக உள்ளது. அதேபோல் உடலுக்கு ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் தருகின்ற இளநீர், மோர், தர்பூசணி உள்ளிட்ட இயற்கை குளிர்பானங்களின் விற்பனை திருச்செந்தூர் பகுதியில் அதிக அளவு உள்ளது.
தர்ப்பூசணி ஜூஸ்
தர்பூசணியை கோடை காலத்தில் உண்ணுவதால் புத்துணர்ச்சியும், ஆரோக்கியமும் கிடைக்கிறது.
இந்த தர்பூசணி ரோட்டோரங்களில் அதிக அளவு விற்பனைக்கு போட்டுள்ளனர். மேலும், தர்பூசணியை ஜூஸ் போட்டும் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் கோவில் வாசல், பஸ் நிலையம் போன்ற பகுதிகளிலும், ரோட்டோரங்களிலும் இயற்கை நீர் சத்து கொண்ட தர்பூசணி மற்றும் தர்பூசணி ஜூஸ் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.