உக்கடம் நகர துணைத் தலைவரை தாக்கிய மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீசார் தீவிரம்
உக்கடம் நகர துணைத் தலைவரை தாக்கிய மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை,
கோவை போத்தனூர் பகுதி சங்கம் வீதியில் நேற்று முன்தினம் இரவு இந்து முன்னணியின் உக்கடம் நகர துணைத் தலைவர் ராமு என்கிற ராமகிருஷ்ணன் (வயது 36) என்பவர் மர்ம ஆசாமிகளால் தாக்கப்பட்டார்.
தலையில் பலத்த காயமடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மர்ம ஆசாமிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறும்போது, ராமகிருஷ்ணன் தாக்கப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தோம். இரவு நேரம் என்பதால் அதில் மர்ம ஆசாமிகளின் உருவம் மற்றும் அவர்கள் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண் தெளிவாக தெரியவில்லை.
மேலும் மர்ம ஆசாமிகள் செல்போனில் யாரிடமாவது உரையாடி உள்ளார்களா? என்பது குறித்து அங்குள்ள டவர்களில் பதிவான செல்போன் விவரங்களையும் சேகரித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பலரை பிடித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.