கொரோனா தனிமை மையத்தில் கலெக்டர் ஆய்வு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை தனிமை மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்
நாகமலைபுதுக்கோட்டை
மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தனிமை மையம் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தது. இதையடுத்து இந்த மையங்கள் மூடப்பட்டன. இ்ந்தநிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது.
இதைதொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிதாக பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொரோனா சிகிச்சை மையங்களை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி வளாகத்தில் உள்ள வ.உ.சி., விடுதியில் கொரோனா தனிமை சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான படுக்கைகள் மற்றும் உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு மையம் தயார் செய்யப்படும் பணிகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து நேற்று மதுரை கலெக்டர் அன்பழகன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்பணிகளை நேரில் பார்வையிட்டனர். அப்போது விரைந்து பணிகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினருக்கு கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டார்.