மகளிர் போலீஸ் நிலையத்தில் தொழிலாளி தற்கொலை முயற்சி
நாகர்கோவிலில் மகளிர் போலீஸ் நிலையத்தில் தொழிலாளி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மகளிர் போலீஸ் நிலையத்தில் தொழிலாளி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காதல்
பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 17 வயது நபர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும் காதல் ஏற்பட்டது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர், அவரை கண்டித்து அறிவுரை கூறினர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ்-2 மாணவியும், தொழிலாளியும் மாயமானார்கள். இதுபற்றி மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் முதலில் கடத்தல் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
மீட்பு
இந்த நிலையில் தொழிலாளியுடன் மாணவி திருப்பூர் அருகே ஒரு வீட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து திருப்பூர் போலீஸ் உதவியுடன் அவர்களை மீட்டு நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து, மாணவியிடம் விசாரித்தனர்.
ஆனாலும் அந்த மாணவி தனது காதலனுடன் தான் செல்வேன் என பிடிவாதமாக இருந்தார். ஆனால் இருவருக்கும் 17 வயதே ஆவதால் இருவரையும் சேர்த்து அனுப்ப முடியாது என போலீசார் கூறினார்கள்.
தற்கொலை முயற்சி
பின்னர் போலீசார் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்ப முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த ஏற்பாடுகளை செய்தனர்.
இந்தநிலையில் மாணவியை பிரிய மனமில்லாமல் தவித்த தொழிலாளி, கழிவறைக்கு செல்ல வேண்டும் என போலீசாரிடம் கூறினார். உடனே போலீசார் அவரை போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்லுமாறு அனுப்பினர். கழிவறைக்கு சென்ற தொழிலாளி, அங்கிருந்த பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.