வெங்காய வியாபாரியிடம் ரூ.16½ லட்சம் கொள்ளை; 2 பேர் கைது
தக்கலை அருகே வெங்காய வியாபாரியின் கவனத்தை திசைதிருப்பி ரூ.16½ லட்சம் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே வெங்காய வியாபாரியின் கவனத்தை திசைதிருப்பி ரூ.16½ லட்சம் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெங்காய வியாபாரி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பெத்தநாடார்பட்டி பகுதியை சேர்ந்தவர் அமுல்ராஜ் (வயது 38). இவர் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் வெங்காயம், உருளைகிழங்கு, பூண்டு போன்றவற்றை சில்லரை வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். விற்பனை செய்த பணத்தை அடிக்கடி மொத்தமாக வசூல் செய்து செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் அமுல்ராஜ் தனது சொகுசு காரில் விற்பனை பணத்தை வசூலிக்க புறப்பட்டார். காரை டிரைவர் கண்ணன் ஓட்டி சென்றார். ஆலங்குளத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 63 ஆயிரத்தையும், நாகர்கோவிலில் ஒரு வியாபாரியிடம் இருந்து ரூ.5 லட்சத்தையும் வசூலித்து விட்டு மொத்தம் ரூ.16 லட்சத்து 63 ஆயிரத்துடன் தக்கலைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மார்த்தாண்டம் நோக்கி புறப்பட தயாரானார்.
ரூ.16½ லட்சம் கொள்ளை
அப்போது அருமனை அருகே மாத்தூர்கோணத்தை சேர்ந்த பபி (31) என்பவர் அமுல்ராஜின் செல்போனில் தொடர்பு கொண்டு சில்லரை வியாபாரம் குறித்து பேச வேண்டும் என கூறினார். இதனையடுத்து அமுல்ராஜ் பபியிடம் பேச தக்கலையில் காத்திருந்தார். சிறிது நேரத்தில் பபி, அவரது நண்பரான கரூர் மாவட்டம் சிவங்கல்பட்டி பகுதியை சேர்ந்த ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் பபி, தான் தக்கலை அருகே ஆழ்வார்கோவில் சந்திப்பு அருகே வாடகை வீட்டில் தங்கி வருவதாகவும், அங்கு சென்று அமர்ந்து பேசலாம் என கூறியுள்ளார்.
அவரது பேச்சை நம்பிய அமுல்ராஜ் காரில் ஆழ்வார்கோவில் சந்திப்பு நோக்கி புறப்பட்டார். பபியும், ராஜாவும் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றனர். ஆழ்வார்கோவில் சென்றவுடன் டிரைவர் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.
உடனே, பபி காரின் பின் கதவை திறந்து அதிலிருந்த ரூ.16 லட்சத்து 63 ஆயிரத்தை எடுத்து கொண்டு ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அமுல்ராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
தனிப்படை அமைப்பு
இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தக்கலை துணை சூப்பிரண்டு ராமசந்திரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் அடங்கிய 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தப்பி சென்றவர்களின் செல்போன் சிக்னல் மூலம் கண்காணித்து பபியையும், அவரது நண்பர் ராஜாவையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் கொள்ளையடித்த பணம் எங்கே? கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இந்த சம்பவத்தில் ஹவாலா பணம் கையாடல் உண்டா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
வியாபாரியிடம் ரூ.16½ லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.