பயணிகள் முககவசம் அணிந்துள்ளார்களா? பஸ்களில் போலீசார் ஆய்வு

பள்ளிபாளையத்தில் பயணிகள் முககவசம் அணிந்துள்ளார்களா? என்று பஸ்களில் போலீசார் ஆய்வு செய்தனர்.

Update: 2021-04-11 19:04 GMT
பள்ளிபாளையம்,

தமிழகத்தில் நாளுக்கு, நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி துறையினர், போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்கள் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே நேற்று பள்ளிபாளையம் போலீசார் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் பள்ளிபாளையம் காவிரி பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி, கொரோனா தடுப்பு விதிகளை முறையாக கடை பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். முககவசம், தலை கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும், அந்த வழியாக வந்த  அரசு, தனியார் பஸ்களை நிறுத்தி அதில் பயணிகள் முககவசம் அணிந்துள்ளார்களா? நின்றபடி செல்கிறார்களா? சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். அப்போது போலீசார் பயணிகள் முககவசம் அணிய வேண்டும், பஸ்சில் ஏறும் போதும், இறங்கும் போதும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது உள்பட கொரோனா தடுப்பு அறிவுரைகளை வழங்கினர். மேலும் அனுமதித்த அளவை விட அதிகமாக பயணிகளை ஏற்றினால் பஸ் கண்டக்டர், டிரைவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்