தூங்கிக்கொண்டு இருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலி திருட்டு
மயிலாடுதுறை அருகே தூங்கிக்கொண்டு இருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு சென்றனர். தலைமறைவான மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குத்தாலம்;
மயிலாடுதுறை அருகே தூங்கிக்கொண்டு இருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு சென்றனர். தலைமறைவான மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
மயிலாடுதுறை அருகே உள்ள நெடுமருதூர் உடையார் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 70). இவரது மனைவி மலர்விழி(55), இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் வழக்கம்போல் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
நள்ளிரவில் மகாலிங்கம் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், வீட்டின் கதவை கடப்பாரையை கொண்டு திறந்து வீட்டுக்கு உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பீரோவை உடைத்து பார்த்தனர். அப்போது பீரோவில் பணம், நகை ஏதும் கிடைக்காத விரக்தியில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த மலர்விழியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்தனர். மர்ம நபர்கள் பறித்துச்சென்ற சங்கிலியின் மதிப்பு ரூ.1½ லட்சம் என கூறப்படுகிறது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதனால் திடுக்கிட்டு கண்விழித்து பார்த்த மலர்விழி சத்தம் போட்டார். உடனே மர்ம நபர்கள் வீட்டுக்குள் இருந்து முன்புற வாசல் வழியாக தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் மலர்விழி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் போலீசார் வீட்டினை பார்வையிட்டு நகை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டு இருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.