ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா ரத்து
பொறையாறு அருகே ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா ரத்து செய்யப்பட்டதால், தேரோட்டம் காணவந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பொறையாறு;
பொறையாறு அருகே ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா ரத்து செய்யப்பட்டதால், தேரோட்டம் காணவந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ரத்து செய்யப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே ஒழுகைமங்கலம் கிராமத்தில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடைவிதித்தது.
இதனால் ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். ஒலி பெருக்கியில் வீதிவீதியாக சென்று பல்வேறு கிராமங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனால் நேற்று நடைபெற இருந்த தேரோட்டம் உள்ளிட்ட ஒரு மாதம் நடைபெறும் விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் முதல் அறிவித்து நடைபெறும் அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டது.
ஏமாற்றத்துடன்
பக்தர்கள் அடுத்த ஆண்டு உற்சவத்தில் கலந்து கொண்டு நேர்த்தி கடனை செய்யுமாறு கோவில் நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர். கோவில் எதிரில் நிலை நிறுத்தப்பட்ட தேருக்கு சிறப்பு வழிபாடு மட்டும் செய்யப்பட்டது.
தேர் திருவிழாவை காண வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நேற்று கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்தனர். திருவிழா ரத்து செய்யப்பட்டதை தெரிந்துக்கொண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.
எங்களுக்கு நஷ்டம்
அதேபோல் திருவிழாவின் போது வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வளையல், மணி கடை, பாத்திரக்கடை, மண்பாண்டகடை, இரும்பு கடை, குளிர்பான கடை, சிறு ஓட்டல்,, வாழைப்பழ கடைகள் உள்ளிட்ட கடைகளை நடத்தி வரும் சிறு, குறு வியாபாரிகள் ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் திருவிழாவை அரசு திடீரென ரத்து செய்யப்பட்டதால், கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களை விற்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.