சுற்றுலா பயணிகள் அலட்சியத்தால் கொரோனா பரவும் அபாயம்

காற்றில் பறந்த கட்டுப்பாடுகள், சுற்றுலாப் பயணிகளின் அலட்சி யத்தால் ராமேசுவரம் பகுதியில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

Update: 2021-04-11 15:58 GMT
ராமேசுவரம், 
காற்றில் பறந்த கட்டுப்பாடுகள், சுற்றுலாப் பயணிகளின் அலட்சி யத்தால் ராமேசுவரம் பகுதியில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
கட்டுப்பாடுகள்
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருவதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழக அரசும், சுகாதாரத் துறையும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ள நிலையிலும் ராமேசுவரம் பகுதியிலோ பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடைபிடிப்பது கிடையாது. 
இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் எந்த ஒரு தீவிர நடவடிக் கையும் எடுக்காமல் பெயரளவில்தான் செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டமாக நின்று நீராடுவதும் மிக அருகருகே நின்று வருவதும் நடைபெற்று வருகிறது. அதுபோல் கோவிலுக்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து பிரகாரம் வரையிலும் எந்த ஒரு சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் மிக நெருக்கமாக நின்று தான் தரிசனம் செய்து செல்கின்றனர். 
கோவிலின் நுழைவு பகுதியில் பக்தர்களின் கைகளை சுத்தம் செய்ய வழங்கப்பட்டு வந்த கிருமி நாசினியும் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய வழங்கப்படாததுடன் பக்தர்களின் உடலின் வெப்பநிலையும் பரிசோதனை செய்யப்படுவது கிடையாது. தீர்த்தமாடும் இடங்களிலும் பக்தர்கள் சரியான கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் தீர்த்தமாடி செல்கின்றனர்.
அதுபோல் தனுஷ்கோடி கடற்கரை, கோவிலின் ரதவீதி, பாம்பன் ரோடு பாலம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்து வருகின்றனர். ஏற்கனவே ராமேசுவரத்தில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் ராமேசுவரம் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றாபடாததாலும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களின் அலட்சியத்தால் ராமேசுவரத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மிகப்பெரும் ஆபத்தை உண்டாக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது. 
கோரிக்கை
எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராமேசுவரம் பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி குறிப்பாக அக்னி தீர்த்த கடற்கரை, கோவில், தனுஷ்கோடி கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்தி கூடுதலாக போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் அங்கு பணியில் ஈடுபடுத்த கூட்டம் படுவதை தடுக்கவும் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம்அணியவும் உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்