கொரோனா பரவலை தடுக்க 27 கண்காணிப்பு குழு நியமனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 27 கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 27 கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
கட்டாயம்
கொரோனா நோய் பரவல் 2-ம் நிலை அதிகரித்து வருவதால் நோய் தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான கீழ்கண்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச 6 அடி இடைவெளியுடன் கூடிய சமூக இடைவெளியினை எப்பொழுதும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கடைகள், வணிகவளாகம், அலுவலகம், பணியிடங்களின் முகப்பு வாயிலில் கிருமி நாசினி வைக்கப்பட்டிருக்க வேண்டும். கடைகள் வணிகவளாகம், அலுவலகம், பணியிடத்தில் கதவு கைப்பிடிகள், லிப்ட் பொத்தான்கள், கைப்பிடி, மேஜை நாற்காலிகள், வாஷ்ரூம் சாதனங்கள் போன்றவற்றையும் அலுவலக வளாகம் மற்றும் பொது இடங்களில் கிருமி நாசினி அடிக்கடி தெளிக்க வேண்டும்.
வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் ஆகியவற்றின் முகப்புவாயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களால் பயன்படுத்தப்பட்ட முகக்கவசம், கையுறை போன்றவற்றை உரிய முறையில் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கண்காணிப்பு
இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் நிறுவனம், கடை, அலுவலகம் உரிமையாளரிடமிருந்து ரூ.200 முதல் ரூ.5 ஆயிரம் வரை அதற்கான அபராதத் தொகை வசூலிக்கப்படும்.இந்த நிபந்தனைகளை மீறுபவர் களிடம் இருந்து அரசாணையின்படி பின்வரும் அட்ட வணையின்படி அபராதத் தொகை வசூலிக்கப்படும். எனவே, ராமநாதபுரம் மாவட் டத்தில் கொரோனா நிலையான நடைமுறைகளை அமல்படுத்திடவும் முகக்கவசம் அணியாதவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாத வர்களுக்கு அபராதம் விதிக்கவும், கண்காணிக்கவும் வருவாய்த்துறை, காவல் துறை, சுகாதாரத்துறை, நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி துறை அலுவலர்களை கொண்ட 27 கண்காணிக்கும் குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த தகவலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.