மாநில எல்லைகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மாநில எல்லைகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூர்,
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் பொதுமக்கள் இ-பாஸ் கண்டிப்பாக பெற வேண்டும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலானது.
இதையொட்டி கூடலூர் பகுதியில் உள்ள தமிழக-கேரள எல்லையான நாடுகாணி, சேரம்பாடி, தாளூர், நம்பியார்குன்னு, பாட்டவயல் மற்றும் தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லா ஆகிய இடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறையினர், போலீசார் முகாமிட்டு வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை தீவிரமாக கண்காணித்தனர்.
ஆய்வு
அவர்கள் முறைப்படி இ-பாஸ் பெற்று உள்ளார்களா? எனவும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்து உள்ளார்களா? எனவும் ஆய்வு நடத்தினர். இதேபோல் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வருகிறார்களா? என பார்வையிட்டனர். மேலும் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது.
அபராதம்
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:- புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
கட்டுப்பாடுகளை மீறும் நபர்களிடம் இருந்து அபராதமும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.