குப்பைகளை தரம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தூய்மை பணியாளருக்கு கத்திக்குத்து
குப்பைகளை தரம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தூய்மை பணியாளருக்கு கத்திக்குத்து.
தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை, நாகல்கேணியை சேர்ந்தவர் கோட்டையா (வயது 45). இவர், பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை குரோம்பேட்டை நியூ காலனி, 2-வது பிரதான சாலையில் கோட்டையா சக தூய்மை பணியாளர்களான ஆதிகேசவன் (45) உள்ளிட்டோருடன் சேர்ந்து குப்பைகளை சேகரித்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தார்.
அப்போது குப்பையில் இருந்த பிளாஸ்டிக் பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக கோட்டையா, ஆதிகேசவன் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த ஆதிகேசவன், தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் கோட்டையாவின் இடதுபக்க முதுகில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக தூய்மை பணியாளர்கள் கோட்டையாவை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதுகில் 2 தையல் போடப்பட்டது. இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆதிகேசவனை தேடி வருகின்றனர்.