தூத்துக்குடியில் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா தொற்று மத்தியபாகம் போலீஸ் நிலையம் மூடப்பட்டது
தூத்துக்குடியில் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மத்திய பாகம் போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போலீஸ் ஏட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பணியாற்றிய மத்திய பாகம் போலீஸ் நிலையம் மூடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் தொற்று பரவல் அதிகரித்து உள்ளது.
இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
போலீஸ் நிலையம் மூடல்
இந்த நிலையில் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஏட்டு ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையம் மூடப்பட்டது. தொடர்ந்து அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது.
அவருடன் பணியாற்றிய மற்ற போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸ் ஏட்டு ஏற்கனவே ஒரு முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.