செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: தர்மபுரியில் பொதுமக்கள் சாலை மறியல்

தர்மபுரியில் வீட்டு மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-11 02:46 GMT
தர்மபுரி,

தர்மபுரி காளிவாத்தியார் தெரு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேல் மாடியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்தநிலையில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான உதிரி பாகங்கள் அந்த பகுதிக்கு வாகனத்தில் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் அருகே நேற்று திரண்டனர். அவர்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  அப்போது செல்போன் கோபுரம் அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்