பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சேலத்திற்கு காரில் கடத்திய ரூ.1½ லட்சம் குட்கா பறிமுதல் - 2 பேர் கைது

பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சேலத்திற்கு காரில் கடத்திய ரூ.1½ லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-11 00:32 GMT
கிருஷ்ணகிரி,

கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு குட்கா, பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் குட்கா கடத்தலை தடுக்க அவர், போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் அருகே கிருஷ்ணகிரி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். 

இதில், காரில் 56 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக காரில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கர்நாடக மாநிலம் துடுக்கனஹள்ளியை சேர்ந்த கன்பத்ராம் (வயது 24), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சாட்பலராம் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கார் மற்றும் ரூ.1½ லட்சம் மதிப்பிலான குட்கா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்