கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 668 வழக்குகளில் ரூ.3.70 கோடிக்கு தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 668 வழக்குகளில் ரூ.3 கோடியே 70 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி,
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. அந்த வகையில் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் நீதிபதி அறிவொளி, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, சிறப்பு மாவட்ட நீதிபதி மணி, கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளர் தமிழ்செல்வன் மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
மாவட்டம் முழுவதும் 10 அமர்வுகள் அமைக்கப்பட்டு 2 ஆயிரத்து 143 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 668 வழக்குகளில் ரூ.3 கோடியே 70 லட்சத்து 42 ஆயிரத்து 26-க்கு தீர்வு காணப்பட்டது.
இதில், சார்பு நீதிபதி கணேசன், மாஜிஸ்திரேட்டு பீட்டர், சிறப்பு சார்பு நீதிபதி ராஜா மகேஷ், கூடுதல் சிறப்பு சார்பு நீதிபதி குமாரவர்மன், கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.டி.கருணாகரன், செயலாளர் மார்க்ஸ், வழக்கறிஞர்கள் கே.ஆர்.பாண்டியன், ராஜா விஸ்வநாத், கோவிந்தராஜூலு, புவனேஸ்வரி, ரபிக் அகமது, அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.