கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்; சுகாதார பணிகள் இணை இயக்குனர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-10 23:10 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தடுப்பு நடவடிக்கை
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றாததால் மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தீவிர கண்காணிப்பு
மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ -பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவர்களை சுகாதார பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தினமும் 1,000 முதல், 1,200 பேர் வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது தொற்று வேகமாக பரவி வருவதால் தினந்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதுபோல் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையும் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
தடுப்பூசி போடும் பணி தீவிரம்
இது குறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது பொதுமக்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மாவட்டத்தில் இதுவரை பொதுமக்கள் 48 ஆயிரத்து 972 தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 76 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8 அரசு ஆஸ்பத்திரிகள், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 40 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அடையாள அட்டை
முன்பு 1,200 முதல் 1,800 பேர் வரை தினமும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் தற்போது 3 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். பொதுமக்கள் தங்களது அடையாள அட்டையுடன் மருத்துவமனைக்கு நேரில் வந்து, உடல் பரிசோதனை செய்த பின்னர் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். தற்போது தேவையான அளவு மருந்து நம்மிடம் உள்ளது.
தினந்தோறும் 5 ஆயிரம் பேர் வரை தடுப்பூசி போட்டுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. மேலும் இது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்