கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி; பாபநாசம் கோவில் சித்திரை விசு திருவிழாவுக்கு தடை

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக, பாபநாசம் கோவில் சித்திரை விசு திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

Update: 2021-04-10 19:59 GMT
விக்கிரமசிங்கபுரம், ஏப்:
பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றம் கடந்த 5-ந் தேதி நடந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நேற்று முதல் பொது மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு அரசு தடைவிதித்ததால் திருவிழா நடக்குமா என்ற சந்தேகம் பக்தர்களிடையே இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பாபநாசம் கோவில் நிர்வாக அதிகாரி ஜெகன்நாதன் உட்பட விக்கிரமசிங்கபுரம் அனைத்து சமுதாய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அரசு அறிவித்துள்ள கொரோனா பரவல் மற்றும் தடை சம்பந்தமாக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக பாபநாசம் கோவில் சித்திரைவிசு திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேற்று மாலை முதல் தடை விதிக்கப்பட்டது. அதாவது வருகின்ற திருவிழா நாட்களில் பாபநாசம் கோவிலில் வைத்து சம்பந்தப்பட்ட சமுதாயத்தினர் 20 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆகமவிதிப்படி கோவிலுக்குள் அனைத்து பூஜைகளும் நடத்தப்படும். அடுத்த அறிவிப்பு வரும் வரை சித்திரைவிசு அன்று பாபநாசத்தில் குளிக்கவும், கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்