முன்னாள் பெண் கவுன்சிலரை தாக்கி 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

சேதுபாவாசத்திரம் அருகே நள்ளிரவில் முன்னாள் கவுன்சிலர் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் அவரை தாக்கி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-04-10 19:42 GMT
சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரம் அருகே நள்ளிரவில் முன்னாள் கவுன்சிலர் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் அவரை தாக்கி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் பெண் கவுன்சிலர்
தஞ்சை மாவட்டம்  சேதுபாவாசத்திரம் அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்தவர் கூத்தலிங்கம்(வயது50). விவசாயியான இவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவரது மனைவி மீனா(46) சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர். இவரது மகன் அபிஷேக்(21), மகள் அபிதா(23).
இவர்கள் அனைவரும் நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் மீனா தண்ணீர் குடிப்பதற்காக வீட்டின் பின்பக்கம் சென்றுள்ளார். 
முகமூடி கொள்ளையர்கள்
அப்போது வீட்டின் கதவைத் தள்ளிக்கொண்டு முகமூடியும், டிரவுசரும், பனியனும் மட்டும் அணிந்த மர்ம நபர்கள் 4 பேர் மீனாவை தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் புகுந்தனர். இதனை சற்றும் எதிர்பாராத மீனா கூச்சல் போட்டுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த கூத்தலிங்கம் எழுந்து வந்தார். அப்போது கூத்தலிங்கத்தை அசைய விடாமல் கொள்ளையர்கள் இறுக்கிப் பிடித்துக் கொண்டனர். 
10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
பின்னர் கொள்ளையர்கள் மீனா, அபிஷேக், அபிதா ஆகியோரை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து மீனா கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
உடனடியாக இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு கூத்தலிங்கம் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 
மருத்துவமனையில் அனுமதி
மேலும் தஞ்சையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் ராஜராஜன் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. பின்னர் நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 
கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த மீனா, அபிஷேக், அபிதா ஆகிய 3 பேரும் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
அச்சத்தில் பொதுமக்கள் 
இந்த கொள்ளை சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் பெண் கவுன்சிலரின் வீட்டுக்குள் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கியதுடன் முன்னாள் கவுன்சிலரின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி சங்கிலியையும் பறித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்