நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.
நெல்லை, ஏப்:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.
கொரோனா அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி அரசு பஸ்களில் பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நெல்லை பெருமாள்புரம் போலீஸ் நிலையம் அருகே உள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் போக்குவரத்து கழக பணியாளர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தப்பட்டனர்.
அவர்கள் நேற்று பஸ் நிலையத்துக்குள் சுற்றி வந்து, அங்கு வந்த பயணிகள் முக கவசம் அணிவதை வலியுறுத்தினர். மேலும் ஒரு பஸ்சில் 40 பயணிகள் மட்டுமே அமரும் வகையிலும், அவர்கள் முக கவசம் அணிந்து பயணிக்குமாறும் அறிவுரை கூறினர். மேலும் முக கவசம் அணியாமல் வந்த சில பயணிகளுக்கு முக கவசம் வழங்கியும், பயணத்தை தொடர அனுமதித்தனர்.
அபராதம்
மேலும் மதுரை, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட தொலைதூர பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் உடல்வெப்பநிலை பரிசோதித்த பின்னரே பஸ்களில் ஏற அனுமதித்தனர்.
இதற்கிடையே பஸ்களில் முக கவசம் அணியாமல் பயணம் செய்தவர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் தலா ரூ. 200 அபராதம் விதித்து வசூலித்தனர்.
ஒவ்வொரு பஸ்களின் முன்பக்க கண்ணாடியிலும் கொரோனா விழிப்புணர்வு தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்க், திரையரங்கு
பெட்ரோல் பங்க்-களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. முக கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், டீசல் வழங்க கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையில் உள்ள பெட்ரோல் பங்க்-களிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. முக கவசம் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கே பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டது.
இதேபோன்று திரையரங்குகளிலும் 50 சதவீத பார்வயைாளர்களே அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். காய்கறி கடைகள், மளிகை கடைகள், வணிக வளாகங்கள், பெரிய ஜவுளி கடைகள், நகைக் கடைகள் மற்றும் பல்வேறு ஷோரூம்களிலும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் வந்து செல்ல வேண்டும். அதனை கடை உரிமையாளர்கள் கண்காணித்து செயல்படுத்த வேண்டும். இதை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓட்டல்கள், டீக்கடைகள் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்புகளை அந்தந்த ஓட்டல் நிர்வாகத்தினர் தங்களது ஓட்டல் முன்பு ஒட்டியுள்ளனர்.
11 குழுக்கள் அமைப்பு
நெல்லை மாநகரில் கொரோனா கட்டுப்பாடுகளை கண்காணித்து செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் நேற்று நெல்லை மாநகரம் முழுவதும் சுற்றி வந்து, பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும் போலீசாரும் கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். போலீசார் பல்வேறு பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.