கொரோனா தடுப்பு வழிகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’

கூடலூரில் கொரோனா தடுப்பு வழிகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2021-04-10 17:50 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தலைமை தாங்கினார். 

தாசில்தார் தினேஷ், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஜெயசிங், அமீர் அகமது, இன்ஸ்பெக்டர் அருள், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், ஆட்டோ டிரைவர்கள், மண்டப உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். 
கூட்டத்தில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் பேசியதாவது:-

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் அரசு அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். முக கவசம் அணியாத நபர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லையென்றால் பூட்டி சீல் வைக்கப்படும். மேலும் 50 சதவீதம் பேரை மட்டும் பணியில் அமர்த்த வேண்டும்.

சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையிலான பயணிகளை மட்டுமே அழைத்து செல்ல வேண்டும். மண்டபங்களில் அனுமதியின்றி நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. 

ஏற்கனவே நிகழ்ச்சிகள் நடத்த முன்பணம் வழங்கி இருந்தாலும், மண்டப நிர்வாகம் அனுமதிக்கக்கூடாது. அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்