சேலம் அருகே ஆடுகள் திருடியதாக அண்ணன், தம்பி காரில் கடத்தல்- 8 பேர் கைது
சேலம் அருகே ஆடுகள் திருடியதாக நினைத்து அண்ணன், தம்பியை காரில் கடத்தியது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் அருகே ஆடுகள் திருடியதாக நினைத்து அண்ணன், தம்பியை காரில் கடத்தியது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரில் கடத்தல்
ஏற்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 26). இவரது தம்பி ஜெகநாதன் (23). இவர்கள் இருவரும் தங்களது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தீர்த்தமலையில் உள்ள கோவிலுக்கு சென்றனர். அப்போது, அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை அயோத்தியாப்பட்டணத்தில் நிறுத்திவிட்டு பஸ்சில் ஏறி சென்றனர்.
அதன்பிறகு அவர்கள் மாலையில் அரூரில் இருந்து ஊருக்கு திரும்பினர். அனைவரும் மோட்டார் சைக்கிளில் குப்பனூர் சோதனைச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு காரில் 8 பேர் திடீரென வந்தனர். பின்னர் அவர்கள் அண்ணன் ராஜேந்திரன், அவரது தம்பி ஜெகநாதன் ஆகியோரை வழிமறித்து சரமாரியாக தாக்கி 2 பேரையும் காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.
8 பேர் கைது
இதை சற்றும் எதிர்பாராத அவர்களது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வீராணம் மற்றும் காரிப்பட்டி போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநகர போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கார் சென்ற பாதையை வைத்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து, காரிப்பட்டி செல்லும் சாலையில் அந்த காரை மடக்கினர்.
போலீஸ் விசாரணையில் காரில் வந்தவர்கள், வீராணம் பகுதியை சேர்ந்த சரவணன் (43), சுக்கம்பட்டி கண்ணன் (21), ரகுபதி, வாழப்பாடி லோகேஷ் (28), வலசையூர் மணி, விக்ரம், அஜித், தாமரை நகர் முரளிதரண் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரை போலீசார் கைது செய்து, காரில் கடத்தப்பட்ட அண்ணன், தம்பி இருவரையும் மீட்டனர். இதையடுத்து அனைவரையும் வீராணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.
ஆடு திருட்டு வழக்கு
அதில், வீராணம், காரிப்பட்டி பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருட்டு போயுள்ளது. ஆடுகள் திருட்டு வழக்கு தொடர்பாக ராஜேந்திரன், ஜெகநாதன் ஆகியோரை அந்த கும்பல் காரில் கடத்தியது தெரியவந்தது. சமீபத்தில் ஆடு திருட்டு வழக்கில் கைதான ஜெகநாதன், ஜாமீனில் வெளியே வந்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். இதனால் ஆடுகளை ஜெகநாதன் மற்றும் அவரது அண்ணன் ராஜேந்திரன் ஆகியோர் தான் திருடி சென்றிருப்பார்கள் எனக்கருதி அவர்களை 8 பேர் கும்பல் காரில் கடத்தி சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.