கொரோனா பரவல்: சேலத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கட்டுப்பாடு-வாகன ஓட்டிகளுக்கு முககவசம் கட்டாயம்

கொரோனா பரவல் காரணமாக சேலத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2021-04-09 22:26 GMT
சேலம்:
கொரோனா பரவல் காரணமாக சேலத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா 2-வது அலை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வீச தொடங்கியுள்ளதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். அவ்வாறு முககவசம் அணியாதவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பபட்டுள்ளது. 
சேலம் மாநகரில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், டீக்கடைகள், ஓட்டல்கள், சலூன்கடைகள், தினசரி சந்தைகளில் கொரோனா பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விற்பனை நிலையங்கள்
இந்தநிலையில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து வாகன ஓட்டிகள் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று சேலத்தில் தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் சேலத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறது. 
அதன்படி சேலம் புதிய பஸ் நிலையம் அருகே செயல்படும் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்பட பல்வேறு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்ப வரும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் காரில் வரும் நபர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அப்போது தான் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு நிரப்பப்படும் என்று தெரிவித்து அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர். அதேசமயம், முககவசம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வந்த சிலரை அங்கிருந்த ஊழியர்கள், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பாமல் திருப்பி அனுப்பினர்.

மேலும் செய்திகள்