மின் கம்பத்தில் கார் மோதல்; 7 வயது சிறுமி பலி
முப்பந்தல் அருகே மின் கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பரிதாபமாக பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆரல்வாய்மொழி,
முப்பந்தல் அருகே மின் கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பரிதாபமாக பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
வியாபாரி
களியக்காவிளை அருகே நடைக்காவு சரிவு பொற்றையை சேர்ந்தவர் சிஜின்போஸ் (வயது 34). இவர் செங்கவிளை பகுதியில் சொந்தமாக சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவருக்கு ஜீனா என்ற மனைவியும், டியோனா (7) என்ற மகளும், 3 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர். சிஜின்போசின் உறவினரான தாசையன் என்பவர் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்த்து வர முடிவு செய்தார்.
இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு சஜின்போஸ் மற்றும் தாசையனின் உறவினர்களான நடைக்காவை சேர்ந்த கோபி (58), உன்னிகிருஷ்ணன் (33), மருதன்கோட்டை சேர்ந்த ரத்தின பாய் (66), கல்வெட்டான் குழியைச் சேர்ந்த வசந்தா (57), சிஜின்போஸின் மகள் டியோனா (7) ஆகிய 6 பேர் காரில் நேற்று நள்ளிரவு புறப்பட்டு சென்றனர். காரை சிஜின்போஸ் ஓட்டினார்.
மின் கம்பத்தில் மோதியது
முப்பந்தல் அருகே சென்றபோது, திடீரென கார் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற மின்கம்பத்தின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரில் இருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கி அலறினர். அவர்களது சத்தம் கேட்டு அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 6 பேைரயும் மீட்டு சிகிச்சைக்காக தேரேகால்புதூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிஜின்போசின் மகள் டியோனா பரிதாபமாக இறந்தார். டியோனா இறந்த தகவல் கேட்டு சிஜின்போசின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும், சிஜின்போஸ் உள்பட 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோகம்
இதுபற்றி ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் உறவினரை பார்க்க சென்றபோது விபத்தில் சிறுமி பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.