சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Update: 2021-04-09 20:03 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்திபெருமானுக்கு மஞ்சள் பொடி, திரவியப்பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்தி பெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மீன்சுருட்டிைய அடுத்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழாவையொட்டி நந்திபெருமானுக்கு 16 வகையான வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், சின்னவளையம், பாப்பாக்குடி, மீன்சுருட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் மீன்சுருட்டியில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

மேலும் செய்திகள்