நெல்லை, ஏப்:
நெல்லையில் நேற்று திடீரென்று மழை பெய்தது.
வெயில்
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெயில் அதிகளவில் அடித்து வருகிறது. வெயில் அளவு 101 டிகிரியை தாண்டியது.
இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம், அம்பை விக்கிரமசிங்கபுரம் மற்றும் தென்காசி மாவட்டம் கடையம், குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதன்பிறகு வெயில் அடித்தது.
திடீர் மழை
நேற்றும் வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அளவு இருந்தது. மாலை 3 மணிக்கு திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. 3-45 மணிக்கு நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை ¼ மணி நேரம் நீடித்தது. சில இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. மாலை 5 மணிக்கு வண்ணார்பேட்டை பகுதியில் சாரல் மழை போல் தூறியது.
மக்கள் மகிழ்ச்சி
நெல்லை பேட்டை, சுத்தமல்லி பகுதிகளில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பாபநாசம் மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது.
இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.