திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஆர்.டி.ஓ.விடம் அனுமதி பெற வேண்டும்

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஆர்.டி.ஓ.விடம் அனுமதி பெற வேண்டும் என்று நீலகிரி கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2021-04-09 17:55 GMT
ஊட்டி,

நீலகிரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரே பகுதியில் 3 பேருக்கு மேல் தொற்று உறுதியானால் அந்த பகுதியை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் போலீஸ், உள்ளாட்சி ஊழியர் மற்றும் தன்னார்வலர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தமிழக அரசு தெரிவித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் கூட்டம் கூடாமலும், அதிக நேரம் நிற்காமலும் ஒரே வழியில் சென்று திரும்ப வழிவகை செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கு வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பில்லை என்ற சான்று அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கிருந்து வரும் சுற்றுலா பயணிகள் நீலகிரியில் உள்ள விடுதி உரிமையாளர்கள் மூலம் தனியார் ஆய்வகத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

 சுகாதாரத்துறை மூலம் உள்ளூர் மக்களுக்கு பரிசோதனை செய்ய போதுமான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.அரசு பஸ்களில் நின்று பயணம் செய்யக்கூடாது. வழித்தடங்களில் அதிக முறை பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம்(ஆர்.டி.ஓ.) அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். அரசு அனுமதித்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்களா? என்று குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படும். இ-பதிவு நடைமுறை தொடரும். 

ஊட்டி, குன்னூர் நகராட்சி மார்க்கெட்டுகள், கூடலூர் உழவர் சந்தையில் வியாபாரிகள் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்தது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நீலகிரியில் 199 தொழிற்சாலைகளில் 23 ஆயிரத்து 483 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒரே இடத்தில் அதிகம் பேர் பணிபுரிவதால் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த நடமாடும் வாகனம் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கிராமங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்