மலைரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
குன்னூர்,
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமாகவும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமாகவும் மலைரெயில் இயக்கப்படுகிறது. மலைகளை குடைந்து அமைக்கப்பட்ட இயற்கை எழில் மிகுந்த பாதையில் மலைரெயிலில் பயணம் செய்வது அனைவரையும் விரும்ப வைக்கிறது. இதனால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மலைரெயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சட்டமன்ற தேர்தலையொட்டி மலைரெயிலில் கூட்டம் இல்லாமல் இருந்தது.
ஆனால் தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், மலைரெயிலில் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு வந்த மலைரெயிலிலும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு சென்ற மலைரெயிலிலும் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்ததை காண முடிந்தது. அவர்கள் குன்னூர் ரெயில் நிலையத்தில் இறங்கி செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.