தொழிலாளர்களின் குடியிருப்புகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்

கூடலூர் அருகே தொழிலாளர்களின் குடியிருப்புகளை காட்டுயானைகள் சேதப்படுத்தின. மேலும் வனத்துறை வாகனத்தை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-09 16:55 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட கழக(ரேஞ்ச்-4) பகுதியில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்புகளை நேற்று அதிகாலை 3 மணியளவில் 2 காட்டுயானைகள் முற்றுகையிட்டன. மேலும் சதீஷ் என்பவரது கடையை உடைத்து சேதப்படுத்தின. 

தொடர்ந்து துதிக்கையை கடைக்குள் நுழைத்து, அங்கு வைத்திருந்த பருப்பு உள்ளிட்ட பொருட்களை வெளியே எடுத்து தின்றன. இதேபோன்று சில தொழிலாளர்களின் வீட்டு கதவு, ஜன்னல்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதுகுறித்து தேவாலா வனத்துறைக்கு, தொழிலாளர்கள் தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் அங்கு வனத்துறையினர் ஜீப்பில் வந்தனர். அப்போது தொழிலாளர்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டு நின்றிருந்த காட்டுயானைகள் திடீரென வனத்துறையினரின் வாகனத்தை துரத்தின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  
உடனே வனத்துறையினர் ஏர்ஹாரன் அடித்து சத்தம் எழுப்பினர். இதனால் காட்டுயானைகள் வந்த வழியாக திரும்பி சென்றன. இந்த சம்பவம் நடைபெற்றபோது தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினர் குடியிருப்புக்குள் பதுங்கி இருந்தனர். 

பின்னர் காட்டுயானைகள் அங்கிருந்து சென்றவுடன் வெளியே வந்தனர். காட்டுயானைகளால் உடமைகள் சேதமடைந்து வருவது மட்டுமின்றி நிம்மதியாக தூங்கவும் முடியவில்லை என்று அவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது.

கூடலூர் வனக்கோட்டத்தில் உள்ள அனைத்து சரக பகுதியிலும் பொதுமக்களை செயலி மூலம் ஒருங்கிணைத்து காட்டு யானைகள் நடமாட்டம் உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களிடமிருந்து வரும் தகவல்களை கொண்டு காட்டு யானைகளை விரட்டுவதற்கான பணியில் இரவு, பகலாக வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது காட்டு யானைகள் தற்காலிகமாக வனப்பகுதிக்கு செல்கிறது. பின்னர் மாலை அல்லது இரவில் மீண்டும் ஊருக்குள் வந்து விடுகிறது. எனவே பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்