முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த பொதுமக்களிடம் ரூ 80 ஆயிரம் அபராதம் வசூல்
முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த பொதுமக்களிடம் இருந்து இதுவரை ரூ 80 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் சிலர் முக கவசம் அணியாமல் வீதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றனர். அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்ததோடு, அபராதமும் விதித்து வருகின்றனர். இது தவிர சுகாதாரத்துறை அதிகாரிகள், நகராட்சி ஊழியர்களும் அபராதம் விதித்து வருகிறார்கள்.
ரூ.200 அபராதம்
அதன்படி நேற்று கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், புதுப்பாளையம், ரெட்டிச்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி, ஆய்வாளர்கள் பெருமாள், கவியரங்கன் ஆகியோர் கொண்ட குழுவினர் முக கவசம் அணியாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களிடம் தலா ரூ.200 அபராதம் விதித்தனர். இதில் போலீசாரும் இணைந்து அபராதம் விதித்தனர். மேலும் பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? முக கவசம் அணிந்திருக்கிறார்களா? என்றும் சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தினர்.
இது பற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.80 ஆயிரம் வசூல்
அதன்படி கடந்த 10 நாட்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் 80 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளோம். நிறுவனங்களில் முக கவசம் அணியாவிட்டால், அந்த நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கிறோம். ஆகவே பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.