கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவு
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது
விழுப்புரம் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக மேற்கொள்ள வேண்டிய கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார பணிகள் இணை இயக்குனர், துணை இயக்குனர், வட்டார மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கூடுதல் கவனம் செலுத்தி அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்க வேண்டும்.
கொரோனா பரிசோதனை
கொரோனா நோய் பாதிப்படைந்தவரின் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள அனைத்து வீடுகளிலும் தவறாமல் கொரோனா நோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், அதோடு அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட வேண்டும். வட்டார மருத்துவ அலுவலர்கள் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தி பரிசோதனைகளை மேற்கொண்டு நோய் தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும். மாவட்ட சித்தா அலுவலர், கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சித்தா மாத்திரைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
திண்டிவனம் மற்றும் விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் சார்பாக அனைத்து பகுதிகளிலும் தினந்தோறும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், உணவு பாதுகாப்பு அலுவலர், நெடுஞ்சாலைகளில் செயல்படும் உணவகங்கள் சமூக இடைவெளியினை பின்பற்றி முககவசம் அணிந்து சுகாதாரமான முறையில் செயல்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டு அவ்வாறு சமூக இடைவெளியினை கடைபிடிக்காமல் சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பனை செய்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற
மேலும் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும், வணிக வளாகங்கள், உணவகங்கள், கல்லூரிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்யும் இடங்களில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும். தற்போது போடபட்டுள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையில் அனைத்துத்துறையை சேர்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் அனைவரும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் சண்முகக்கனி, துணை இயக்குனர் செந்தில்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) ரூபினா உள்பட பலர் கலந்துகொண்டனர்.