குடோன் மேலாளரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
குடோன் மேலாளரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சம் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
பொன்னேரி,
சென்னை தி.நகர் வெங்கட்டராமன் சாலையை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 50). இவர் சோழவரம் பகுதியில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்த குடோனில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துடன் காரில் சோழவரத்திற்கு வந்து கொண்டிருந்தார். மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செம்புலிவரம் கிராமம் அருகே உள்ள ஓட்டல் முன்பு காரை நிறுத்தி விட்டு சாப்பிட்டார். பின்னர் காரின் அருகே வந்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கார் கதவை திறந்து பார்த்த போது அதில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் காசோலைகளை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து சோழவரம் போலீசில் ராம்குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.