தைரியம் இருந்தால் என் வீட்டுக்கு சோதனை நடத்த வாருங்கள்
வருமானவரித்துறையினர் தைரியம் இருந்தால் என் வீட்டுக்கு சோதனை நடத்த வாருங்கள் என்று உடுமலை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
போடிப்பட்டி
வருமானவரித்துறையினர் தைரியம் இருந்தால் என் வீட்டுக்கு சோதனை நடத்த வாருங்கள் என்று உடுமலை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தேர்தல் பிரசாரம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.தென்னரசு ஆகியோரை ஆதரித்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று உடுமலையை அடுத்த முக்கோணத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
பல்வேறு கருத்துக் கணிப்புகள் 180 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும் என்று சொல்கிறது. ஆனால் நாம் 220 தொகுதிகளில் ஜெயித்துக்காட்ட வேண்டும். மடத்துக்குளம் தொகுதியில் ஜெயராமகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரன் எம்.பி.யாக இருந்தபோது தனது சொந்த லாபத்துக்காக பைபாஸ் சாலை அமைத்து அதைச்சுற்றி நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கினார். இவர் மக்கள் நலனுக்காக செயல்படவில்லை. ரியல் எஸ்டேட் புரோக்கராக செயல்பட்டுள்ளார். மேலும் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு 5 ஏக்கர் இடத்தை இலவசமாக வழங்கி அதை சுற்றி இருக்கும் எல்லா நிலத்தையும் குறைந்த விலைக்கு வாங்கி கொள்ளையடித்துள்ளார்.
செல்லாக்காசாக்க வேண்டும்
இந்தியா முழுக்க மோடி அலை அடித்தபோது பாராளுமன்றத் தேர்தலில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் 39-ல் 38 இடங்களை வென்றது. 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என்று மோடி அறிவித்தபோது தங்கள் சொந்தக் காசை எடுப்பதற்கு பலரும் ஏ.டி.எம். வாசலில் நின்று இறந்து போனதை மறந்து விடாதீர்கள். இதைத்தான் மோடி செல்லாக் காசாக்கினார். இப்போது நீங்கள் மோடியையும், பழனிசாமியையும் செல்லாக்காசாக்க வேண்டும். புதிய இந்தியா பிறக்கப் போகிறது என்று மோடி சொன்ன புதிய இந்தியாவை யாராவது பார்த்தீர்களா?. 15 லட்சம் ரூபாய் வங்கிக்கணக்கில் போடுவதாகச்சொன்னார், போட்டாரா?. நமக்கு வரவேண்டிய 15 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரிப்பணத்தையும், இழப்பீட்டுத் தொகையையும் கொடுக்கவில்லை.
3 ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு வந்த மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனையை நான் மதுரைக்கு சென்று பார்த்தேன். அதை நீங்களும் பாருங்கள். இதற்கு செலவுக்கணக்கு ரூ.75 கோடி கணக்கு காட்டியுள்ளார்கள். 2 நாட்களுக்கு முன் மோடி, உதயநிதி குறுக்கு வழியில் வந்தவர் என்று பேசியுள்ளார். நான் குறுக்கு வழியில் வந்தவனா?. நான் இந்தியப்பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளேன். தைரியமிருந்தால் மக்களை சந்தியுங்கள் இல்லாவிட்டால் 10 பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுங்கள். அமித்ஷா, உதயநிதியின் வளர்ச்சி முக்கியமா? தமிழ்நாட்டின் வளர்ச்சி முக்கியமா? என்று கேட்டுள்ளார். நான் எப்போதும் உங்களுடன் உங்கள் வீட்டுப்பிள்ளையாக இருப்பதே முக்கியம். எனக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம்.
என் வீட்டிற்கு வாருங்கள்
10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியிலிருப்பவர்கள் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள்?. 32 வயதான அமித்ஷாவின் மகன் சொத்துமதிப்பு 2 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. கிரிக்கெட் விளையாடத் தெரியாத அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளார். குஜராத்தில் மந்திரியாக இருந்த போது போலி என்கவுண்ட்டர் நடத்தி கம்பி எண்ணியவர் அமித்ஷா. என் பேரிலுள்ள சொத்துக்களை உங்கள் மகன் பெயரில் எழுதி வைக்கிறேன். உங்கள் பையன் பெயரிலுள்ள சொத்துக்களை என் பெயரில் எழுதி வைக்க முடியுமா?. சவாலுக்கு தயாரா?. உங்களைப் பார்த்து பயப்படுவதற்கு நான் எடப்பாடி பழனிசாமியோ, பன்னீர்செல்வமோ இல்லை. நான் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியின் பேரன். என் தங்கை செந்தாமரையின் வீட்டில் தற்போது வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளனர். தைரியமிருந்தால் என் வீட்டுக்கு சோதனை செய்ய வாருங்கள்.
கிளைச்செயலாளர்கூட பயப்படமாட்டான்
எடப்பாடி பழனிசாமி எப்படி முதல் -அமைச்சரானார். டேபிள் சேருக்குள் புகுந்து சசிகலா அம்மாவின் காலைப் பிடித்து முதல்வராகி கடைசியில் அந்த அம்மாவின் காலையும் வாரி விட்டார். சசிகலா அம்மாவின் டேபிள் சேருக்குக்கீழே தான் வெற்றி நடை போடுகிறது. மக்களைப் பார்த்து, மக்களை சந்தித்து, மக்கள் வாக்குகளைப் பெற்று முதல்வராகியிருக்க வேண்டும். இப்படி குறுக்கு வழியில் டேபிள் சேருக்குக் கீழே புகுந்து முதல்வரான உங்களுக்கு மக்கள் பிரச்சினை எப்படி தெரியும். உங்கள் வருமானவரி சோதனைக்கு தி.மு.க.வின் கிளைச்செயலாளர் கூட பயப்பட மாட்டான்.
பி.ஏ.பி. பாசன விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும். அப்பர் அமராவதி திட்டம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும். வன விலங்குகளால் உயிர் சேதம் பொருள் சேதம் ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அமராவதி, திருமூர்த்தி அணைகள் வருடம் தோறும் வறட்சி காலத்தில் தூர்வாரப்படும். வண்டல் மண் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். அமராவதி சர்க்கரை ஆலை புனரமைக்கப்படும். மடத்துக்குளம் அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும். அமராவதி ஆற்றில் தேவையான இடங்களில் தடுப்பணை கட்டப்படும். மலைவாழ் கிராமங்களில் அடிப்படை வசதிகள், பட்டா, சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர தாய்மார்களுக்கு தேவையான 7 உறுதிமொழிகளை தலைவர் கொடுத்துள்ளார். கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3- ம் தேதி கொரோனா நிவாரணத் தொகை ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
நீட் தேர்வு
ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் மாதம் தோறும் உரிமைத் தொகையாக ரூ. 1000, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்படும். கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் வீடு தேடி வந்து இலவச மருத்துவம் செய்யப்படும். நகரப்பேருந்துகளில் இனி தாய்மார்கள் எங்கே வேண்டுமானாலும் ஏறலாம், இறங்கலாம். நீங்கள் தான் அந்த பஸ்சுக்கு முதலாளி. தி.மு.க. ஆட்சியில் 480 ரூபாயாக இருந்த கியாஸ் சிலிண்டர் இப்போது என்ன விலை. மானியம் கொடுத்து சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்போம். பெண்களுக்கு 30 சவீதமாக இருந்த வேலை வாய்ப்பை உயர்த்தி 40 சதவீதமாக்குவோம். முதியோர் உதவிதொகை ஆயிரத்திலிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும். நூறு நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம். கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் தேர்வை கொண்டு வர முடியவில்லை.
காமெடி அமைச்சர்
கல்வி என்பது மாநில உரிமை அதில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்று அந்த அம்மா நீட் தேர்வை தைரியமாக எதிர்த்தார்கள். ஆனால் தற்போது 2 அம்மாவாசைகளும் சேர்ந்து நீட் தேர்வை நுழைத்தார்கள். இந்த நீட் தேர்வினால் இந்த 3 வருடத்தில் மட்டும் 14 குழந்தைகள் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள். அரியலூர் அனிதா ஆரம்பித்து விக்னேஷ் வரை 14 குழந்தைகள் இறந்துள்ளனர். டாக்டராக ஆசைப்பட்டது அவர்களின் தவறா?. தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை அடியோடு ஒழிப்பேன் என்று தலைவர் வாக்குறுதி கொடுத்துள்ளார்கள்.
முதல் முதலாக போட்டியிடும் வேட்பாளரான நான் பிரசாரத்துக்கே போகவில்லை. ஆனால் கருணாநிதி 3 முறை ஜெயித்த தொகுதி என்பதால் ஜெயித்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு என்னுடைய வெற்றியை விட மடத்துக்குளத்தில் அண்ணன் ஜெயராமகிருஷ்ணனின் வெற்றியும் , உடுமலையில் அண்ணன் தென்னரசுவின் வெற்றியும் தான் முக்கியம்.அ.தி.மு.க, பா.ஜ.க.வினர் வந்து வாக்கு கேட்டால் உங்கள் அம்மா எப்படி செத்தார்கள் என்று கேளுங்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை 80 நாட்கள் அப்பலோ ஆஸ்பத்திரியில் அடைத்து வைத்திருந்தார்கள். யாரையும் பார்க்க விடவில்லை. அந்த அம்மாவின் ரத்த சொந்தங்களையே பார்க்க விடவில்லை. ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள் வெளியே வந்து அம்மா இன்று இட்லி சாப்பிட்டார்கள், அம்மா இன்று இட்லிக்கு சட்னி தொட்டு சாப்பிட்டார்கள் என்று பேட்டி கொடுத்தார்கள்.ஒரு நாள் அம்மா இன்று செத்துப்போய் விட்டார்கள் என்று ஒரு அமைச்சர் சொன்னார். தேங்காய் சீனிவாசன் காமெடி நடிகர் என்றால் திண்டுக்கல் சீனிவாசன் காமெடி அமைச்சர். அவர் 80 நாளும் அம்மாவை பார்க்கவே இல்லை எங்களை பொய் சொல்லச் சொன்னார்கள் என்று மன்னிப்பு கேட்கிறார். இந்த பிரசாரத்தை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்
பிரசாரத்தின் போது உதயநிதி என்ற சிறுவன் உதயநிதி ஸ்டாலினுக்கு கைத்தறி நூலால் செய்யப்பட்ட மாலையை அணிவித்து வாள் ஒன்றை பரிசாக அளித்தார்.