ஓசூரில் தனியார் நிறுவன இயக்குனரை கொல்ல முயற்சி 4 பேர் கைது

ஓசூரில் தனியார் நிறுவன இயக்குனரை கொல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-02 19:00 GMT
ஓசூர்,

கர்நாடக மாநிலம் மாலூர் நேரு நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 36). இவர் தனியார் நிறுவன பாதுகாப்பு பிரிவில் மூத்த இயக்குனராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் கர்னூர் பகுதியில் உள்ள பிளிப்கார்ட் சேமிப்பு கிடக்கில் ஆய்வு செய்து விட்டு அவர் வெளியே வந்த போது காரை மறித்த வாலிபர் கத்தியால் காரில் அமர்ந்திருந்த மஞ்சுநாத்தை கையில் வெட்டி விட்டு தப்பி சென்றார்.

இது தொடர்பாக மஞ்சுநாத் கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஓசூர் மத்திகிரி காடிபாளையத்தை சேர்ந்த அப்ரீத் (21), என்பவர் மஞ்சுநாத்தை கொலை செய்ய முயன்றது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பெங்களூரு பிளிப்கார்ட் நிறுவன கிளை மேலாளராக பணியாற்றி வரும் கோவையை சேர்ந்த முகமது ஆசிப் (36), சென்னை தகித் உதின் கான்சிட் பகுதியை சேர்ந்த பிளிப்கார்ட் நிறுவன உதவி மேலாளர் முகமது தாகிர் உல்லா செரிப் (28), பெங்களூரு பசவேஸ்வரா நகரை சேர்ந்த நரேந்திரநாத் (47) ஆகியோரது ஊதியத்தை மஞ்சுநாத் குறைத்ததுடன் வேறு பகுதிக்கு பணியிட மாற்றம் செய்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் மஞ்சுநாத்தை கொலை செய்ய திட்டமிட்டு, அப்ரீத்திற்கு பணம் வழங்கியதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அப்ரீத் உள்ளிட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்