நுண்ணறிவு பிரிவு போலீசார் 7 பேர் திடீர் இடமாற்றம்
கோவையில் ஒரே இடத்தில் பல ஆண்டாக பணியாற்றிய நுண்ணறிவு பிரிவு போலீசார் 7 பேர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
கோவை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதை யொட்டி தேர்தலை வெளிப்படையாக நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் ஒரே இடத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
கோவை மாநகர போலீஸ் நிலையங்களில் பதிவாகும் வழக்குகள், புகார்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், ரகசிய தகவல்கள் ஆகியவை பற்றிய விவரங்களை சேகரித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவுக்கு அனுப்பும் பணியில் போலீசார், தலைமைக்காவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஈடுபடுவார்கள்.
அவர்கள் நுண்ணறிவு பிரிவு போலீசார் என்று அழைக்கப்படுவார்கள்.
7 பேர் இடமாற்றம்
தற்போது தேர்தல் நடக்க இருப்பதால் கோவை மாநகரில் பணியாற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பணம் வசூலில் ஈடுபடுவதாகவும், ஒரே இடத்தில் பல ஆண்டுகள் பணியாற்றுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கோவை பெரியகடை வீதி, ஆர்.எஸ்.புரம், போத்தனூர், குனியமுத்தூர், சிங்காநல்லூர், பீளமேடு, ரேஸ்கோர்ஸ் ஆகிய 7 போலீஸ் நிலையங்களின் நுண்ணறிவு பிரிவு போலீசார் ஒட்டுமொத்தமாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
இதற்கான உத்தரவை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பிறப்பித்துள்ளார்.