தீமிதி திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம்
சீர்காழி நங்கநலதெரு முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
சீர்காழி நங்கநலதெரு முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முத்துமாரியம்மன் கோவில்
சீர்காழி அருகே மேலத் தென்பாதி நங்கநல தெருவில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இதனை தொடர்ந்து நேற்று காலை சட்டைநாதர் கோவிலில் இருந்து வானவேடிக்கை, கலை நிகழ்ச்சிகளோடு பால்குடம், அலகு காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
தீ மிதித்து நேர்த்திகடன்
பின்னர் முத்துமாரியம்மனுக்கு இளநீர், பன்னீர், பால் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை கோவில் முன்பு அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து வருகிற 4-ந்தேதி மஞ்சள் நீர் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.