தர்மபுரி அருகே கூடைப்பந்து பயிற்சியாளர் வீட்டில் 14 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
தர்மபுரி அருகே கூடைப்பந்து பயிற்சியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தர்மபுரி,
தர்மபுரி அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 31). இவர் பெங்களூருவில் கூடைப்பந்து பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். கோவிலூரில் உள்ள தனது வீட்டிற்கு இவர் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.
இதனிடையில் இவருடைய குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருவுக்கு சென்றிருந்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் கோவிலூருக்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுதொடர்பாக மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.