புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2021-04-02 17:29 GMT
மூங்கில்துறைப்பட்டு


தவக்காலம்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து, உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த காலத்தை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது வழக்கம். இந்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும், புனித நாட்கள் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த காலத்தில் அனைவரும் நற்சிந்தனை, நல் ஒழுக்கம், நற்பண்பு, அடுத்தவர்களுக்கு உதவும் நோக்கத்தோடும் மற்றும் புலால் உண்ணாமலும் இருந்து 40 நாட்கள் உபவாசமிருந்து, தவக்காலம் கடைபிடிக்கப்படும். இதில் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு வரக்கூடிய வெள்ளிக்கிழமை புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட சம்பவம் நினைவு கூரப்பட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

சிலுவைப்பாதை

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சாம்பல் புதன் கிழமையுடன் தொடங்கியது. அதன் பிறகு கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசமிருந்து, தவக்காலத்தை கடைபிடித்தனர். இதையடுத்து நேற்று புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. 

இதையொட்டி இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்தை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் ஈருடையாம்பட்டு தூய விண்ணரசி ஆலயத்தில் நடந்த சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் லாரியில் இயேசு வேடமணிந்தவர் சிலுவையை சுமந்து நிற்க, அவரை யூதர் வேடமணிந்தவர்கள் சூழ்ந்து நின்று சவுக்கால் அடித்தனர். லாரி முன்னோக்கி செல்ல, பின்னால் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தபடி ஆலயத்தை சென்றடைந்தனர். 

பின்னர் ஆலய வளாகத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் வகையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். 

நாளை ஈஸ்டர்

அதேபோல் அருளம்பாடி, சவேரியார்பாளையம், மைக்கேல்புரம், கானாங்காடு, மையனூர், விரியூர், பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்று சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுந்த நாளையொட்டி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

மேலும் செய்திகள்