கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு தீ வைப்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு மர்ம கும்பல் தீ வைத்தது.இந்த சம்பவத்தை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-04-02 16:56 GMT
கள்ளக்குறிச்சி


அண்ணா சிலை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி தலைவர்களின் சிலைகள் அனைத்தும் துணியால் மூடி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாதவச்சேரி பகுதியில் உள்ள அண்ணா சிலையும் துணியால் மூடி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அண்ணாசிலைக்கு மர்ம கும்பல் தீ வைத்தது. இதனால் சிலையை மூடி மறைத்து வைக்கப்பட்ட துணி எரிந்து சாம்பல் ஆனது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் 

நேற்று காலையில் அந்த பகுதிக்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் சிலர் அண்ணா சிலை புகைபிடித்து கருமையான நிறத்துடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றிய தகவல் அறிந்து அங்கே தி.மு.க.வினர் திரண்டனர். 

பின்னர் சிலைக்கு தீ வைத்த கும்பலை கைது செய்யக்கோரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெங்கடேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது அண்ணா சிலைக்கு தீ வைத்த கும்பலை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றனர். பின்னர் இது தொடர்பாக புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

20 பேர் மீது வழக்கு

இதை ஏற்றுக்கொண்ட தி.மு.க.வினர் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் இதுதொடர்பாக கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மாதவச்சேரியை சேர்ந்த பா.ம.க. ஒன்றிய பிரதிநிதி ராமசந்திரன் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தீ வைக்கப்பட்ட அண்ணா சிலையை வருவாய்த்துறை ஊழியர்கள் சுத்தம் செய்து மீ்ண்டும் துணியால் மூடினர்.  அண்ணாசிலைக்கு மர்ம கும்பல் தீ வைத்த சம்பவம் மாதவச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்