போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி கருப்பு கண்ணாடி
கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கருப்பு கண்ணாடியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொளுத்தும் வெயிலில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு நீர் மோர், எலுமிச்சை சாறு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெயிலில் தொடர்ந்து பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குறைந்த எடை கொண்ட காற்றோட்டமான தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடிகள் (கூலிங் கிளாஸ்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீசார்களில் முதல்கட்டமாக விழுப்புரம் போக்குவரத்து போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன், தொப்பி, கருப்பு கண்ணாடி, நீர் மோர், எலுமிச்சை சாறு மற்றும் கொரோனா நோய் தடுப்புக்காக முக கவசம், கையுறை, சானிடைசர் திரவம் ஆகியவற்றை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், போக்குவரத்து போலீசார், பணியின்போது கட்டாயம் இந்த தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடியை அணிந்துகொண்டு வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா, ஏட்டுகள் பெருமாள், தெய்வகண்ணன், மாதவன் உள்பட பலர் உடனிருந்தனர்.