வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-04-01 18:11 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்(தனி), ஊட்டி, குன்னூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கூடலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்துவதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அருகே உள்ள தனியார் பள்ளி கட்டிடத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. இதையொட்டி கூடலூர் தனியார் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

112 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் வி.வி.பேட் எந்திரத்திலும் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் 83 மண்டல அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி தொகுதியில் 308 வாக்குச்சாவடிகளும், கூடலூர், குன்னூர் தொகுதிகளில் தலா 280 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 868 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் 112 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கருதப்படுகிறது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை

இந்த வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதேபோல் 868 வாக்குச்சாவடிகளில் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா பரவலையொட்டி தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் கூடுதலாக 2 பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒருவர் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்வதற்கும், மற்றொருவர் சானிடைசர் மற்றும் கையுறை வழங்கும் பணியிலும் ஈடுபடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது நிலவரி திட்ட அலுவலர் (கூடலூர் ஜென்மம்) கீர்த்தி பிரியதர்ஷினி, கூடலூர் தொகுதி தேர்தல் அலுவலரும், ஆர்.டி.ஓ.வுமான ராஜ்குமார், தாசில்தார்கள் தினேஷ் குமார், தினேஷ் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்