திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்
திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் குளோரியான் நேற்று முன்தினம் உடன்குடி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர், வேட்பாளரை தரக்குறைவாக பேசியதாக கூறி அதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் திருச்செந்தூரில் நேற்று ஊர்வலம் நடத்தினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஊர்வலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி அருகில் இருந்து தொடங்கி, பகத்சிங் பஸ் நிலையம் முன்பு முடிவடைந்தது. பின்னர் அவர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு உதவி கலெக்டர் தனப்பிரியாவிடம் மனு கொடுத்தனர். இந்த மறியல் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குளோரியான், தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன், தெற்கு மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அன்னலட்சுமி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பிரபு, சட்டமன்ற தொகுதி தலைவர் ஸ்டீபன் லோபோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.