100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி காட்பாடியில் மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி காட்பாடியில் மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி

Update: 2021-04-01 17:25 GMT
காட்பாடி

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி காட்பாடியில் நடந்தது. இதில் 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சித்தூர் பஸ் நிலையம் முதல் கிரீன் சர்க்கிள் வரை 5 கிலோ மீட்டர் தூரம் மாணவ-மாணவிகள் ஓடினர்.

இந்த மாரத்தான் போட்டியில் ஆர்வமாக கலந்து கொண்ட பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கலெக்டர் மலர்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து, எதிர்காலத்தில் மாணவர்கள் நலமுடன் வாழவும் மிக உயர்ந்த பதவிகளுக்கு வர வேண்டும் எனவும் இதுபோன்ற மாரத்தான் போட்டிகளில் பங்குபெறும் மாணவ மாணவிகளுக்கு மன உறுதி, உடல் உறுதி மற்றும் தன்னம்பிக்கை கிடைக்கிறது என்றார்.

போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த கோகுல்நாத், அமர்நாத், விஷ்வா மற்றும் மாணவிகள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த கார்ணாம்பட்டு அரசு பள்ளி மாணவிகள் ரேவதி, இந்துமதி, சிவரஞ்சனி ஆகியோருக்கு கேடயங்களை வழங்கி கலெக்டர் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் செந்தில் குமரன், விளையாட்டுத் துறை அலுவலர் ஆலிவாசன், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் திருமணி, ஜெயகாந்தன், வெங்கடேசன், அங்குராஜ், விளையாட்டு ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்