மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கல்வராயன்மலையில் கடுக்காய் தொழிற்சாலை அமைத்து தரப்படும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேச்சு

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கல்வராயன் மலையில் கடுக்காய் தொழிற்சாலை அமைத்து தரப்படும் என கச்சிராயப்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Update: 2021-04-01 17:01 GMT
கள்ளக்குறிச்சி

தேர்தல் பிரசாரம்

சங்கராபுரம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அ.ராஜாவை ஆதரித்து கச்சிராயப்பாளையம் புதிய பஸ் நிறுத்தம் அருகில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். 
அப்போது அவர் பேசியதாவது:-

மணல் கொள்ளை

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மணல் கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெறும். அதேபோல் கல்வராயன் மலையில் உள்ள இயற்கை வளங்கள் காணாமல் போய்விடும். ஆனால் உங்கள் வேட்பாளர் ராஜா வெற்றிபெற்றால் கல்வராயன் மலை சுற்றுலா தலமாக ஆக்கப்படும்.
கச்சிராயப்பாளையம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். கல்வராயன் மலையில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும். 

மேலும் கல்வராயன் மலையில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கடுக்காய் தொழிற்சாலை அமைத்து தரப்படும். கோமுகி அணை தூர்வாரப்படும். 

அரசு மருத்துவமனை

சங்கராபுரம் பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனை உருவாக்கித் தரப்படும். மகளிர் சுகாதார நிலையங்கள் அமைத்து தரப்படும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும். 

மேலும் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை. இல்லத்தரசிகளுக்கு வாஷிங் மெஷின் உள்ளிட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றி தரப்படும். எனவே இந்த தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறன்.
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்