மணப்பாறை தொகுதியில் முரசு சின்னத்துக்கு வாக்கு கேட்டு தே.மு.தி.க. வேட்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் பிரசாரம்

மணப்பாறை தொகுதியில் முரசு சின்னத்துக்கு வாக்கு கேட்டு தே.மு.தி.க. வேட்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2021-04-01 12:12 GMT
மணப்பாறை, 

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க.  தே.மு.தி.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தற்போது தொகுதி முழுவதும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று மணப்பாறை நகர பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். ஒவ்வொரு வீதியாக சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

மணப்பாறை மண்ணின் மைந்தனாக போட்டியிடுகின்றேன். கடந்த 10 ஆண்டுகாலம் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மணப்பாறை தொகுதியில் என்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அவரால் மணப்பாறை தொகுதி எந்தவகையிலும் வளர்ச்சி அடையவில்லை. இதே போல் தி.மு.க. கூட்டணி வேட்பாளரைப் பொறுத்தவரை அவருக்கு இதுசொந்த தொகுதியும் அல்ல, எங்கிருந்தோ வந்திருக்கிறார். ஜாதி, மதம், இனம் கடந்து செயலாற்றி வரும் எனக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை தர வேண்டும். 

எந்தவித ஆட்சி அதிகாரமும் இல்லாத போதே என்னால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்துள்ளதோடு, பனியன் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த முறை மணப்பாறை தொகுதி மக்கள் எனக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பிற்குரிய வெற்றியை தர வேண்டும். உரிமையோடு வாக்களியுங்கள் உங்களில் ஒருவனாக உங்களுக்காகவே பணியாற்ற காத்துக்கொண்டிருக்கின்றேன்.
மணப்பாறை தொகுதியில் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவே இருந்து வரும் திட்டங்களை எல்லாம் செயல்படுத்திட, மேன்மை பொருந்திய தொகுதியாக மணப்பாறையை மாற்றிக் காட்டிட எனக்கு இந்த முறை வாய்ப்பு தாருங்கள். தங்களின் வாக்கை முரசுக்கு தாருங்கள் என கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த பிரசாரத்தில் தே.மு.தி.க., அ.ம.மு.க., எஸ்.டி.பி.ஐ. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்