தமிழர்களின் தன்மானம் காக்க மாங்குடிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் பிரச்சாரம்
காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளரும், செய்தி தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமி காரைக்குடி தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.
சிவகங்கை,
காரைக்குடி தொகுதிக்கென தனிச்சிறப்புகள் உண்டு. அவை அனைத்தையும் தன்னிடத்திலும் கொண்டவர் நமது வேட்பாளர் மாங்குடி. பண்பாட்டு பெட்டகமாய், கலாச்சார கருவூலமாய், பாரபட்சமின்றி பகுதி மக்களுக்கு பாடுபடுபவராய், உண்மையின் உருவமாய், உழைப்பின் சிகரமாய் திகழ்பவர். மாங்குடி.
தமிழகத்தில் புயல் வெள்ளம் வந்தபோது மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்டோம் கிடைக்கவில்லை. ஜி.எஸ்.டி. வருவாயில் தமிழகத்திற்கான பங்கை கேட்டோம். கிடைக்கவில்லை என சட்டப்பேரவையில் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓபிஎஸ் அறிவித்தார். அந்த அறிவிப்பு இன்னும் அவை குறிப்பில் உள்ளது. இதற்கு என்ன அர்த்தம் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று தானே அர்த்தம்? தமிழ்நாடு பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் விவாதிக்க ஊர்வலமாகச் சென்ற எம்பிக்கள் குழுவை பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டார். இது எதைக்காட்டுகிறது. தமிழகத்தின் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை உணர்த்தவில்லையா? இந்தியாவிலேயே எங்கும் நடக்காத செயலாக தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. தமிழக அரசின் மாண்பினையே கேள்விக்குள்ளாக்கியது. இதுகுறித்து மத்திய அரசிடம் கேள்வி கேட்கும் துணிவு அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு இருந்ததா? இப்படிப்பட்டவர்கள் இப்போது கூட்டணி வைத்துள்ளனர். இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.
தமிழகம் இழந்த கௌரவத்தை மீட்க தான் தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து உள்ளோம். நாம் அனைவரும் ஒற்றுமையாக சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். நம்மை சாதி, மத, இன அடிப்படையில் பிரிக்க சதி நடக்கிறது. அதனை முறியடிப்போம். பெண்களுக்கு சுய தொழில் பயிற்சியளித்து. சுயசார்பு பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய செய்தவர், மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கியவர், விவசாயிகளின் கடன்களை உண்மையாகவே தள்ளுபடி செய்தவர், உலகமே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தவர், மண்ணின் மைந்தர் ப.சிதம்பரம் அடையாளம் காட்டிய வேட்பாளர் மாங்குடியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இப்பகுதி மக்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்பவர்கள். மாங்குடியும் வெற்றி பெற்று மற்ற தொகுதிகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்வார். தமிழர்களின் தன்மானம் காக்க மாங்குடிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் இவ்வாறு பேசினார்.