பேராசிரியைகள் கோர்ட்டு ஊழியர்கள் உள்பட 19 பேருக்கு கொரோனா தொற்று

கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியைகள், கோர்ட்டு ஊழியர்கள் உள்பட 19 பேருக்கு கொரோனா தொற்று உறுத செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-31 20:40 GMT
கும்பகோணம்:
கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியைகள், கோர்ட்டு ஊழியர்கள் உள்பட 19 பேருக்கு கொரோனா தொற்று உறுத செய்யப்பட்டுள்ளது. 
19 பேருக்கு கொரோனா தொற்று
தஞ்சை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நகரிலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து மாணவ-மாணவிகள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள்,  பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் 186 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியைகள் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பகோணம் கோர்ட்டில் வேலைபார்க்கும் கோர்ட்டு  ஊழியர்கள் 3 பேர் உள்ளிட்ட 19 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேவையான முன்னேற்பாடுகள்
இவர்கள் அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா உறுதிசெய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த அவர்களது உறவினர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்தபிறகு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில் தேவையான முன்னேற்பாடுகள் நகராட்சிக்குட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தயார் நிலையில் உள்ளது என நகராட்சி ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்